1.
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர்
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ் வரை இறக்குவை யாயின்
மை வரை நாட! வருந்துவள் பெரிதே.
2.
அரும் பெருள் செய் வினை தப்பற்கும் உரித்தே
பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்
செல்லாய் அயினோ நன்றே
மெல்லம் புலம்ப இவள் அழப் பிரிந்தே.
3.
புதுக் கலத்து அன்ன கனிய ஆலம்
போகில் தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்
தண்ணிய இனியவாக
எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே.
4.
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர்ப் பத்தல் யானை வெளவும்
கல் அதர்க் கவலை செல்லின் மெல்லியல்
புயல் நெடுங் கூந்தல் புலம்பும்
வயமான் தோன்றல் வல்லா தீமே.
5.
களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்துச்
சுடர் தொடிக் குறு மகள் இனைய
எனைப் பயன் செய்யுமோ விடலை நின் செலவே.
6.
வெல் போர்க் குரிசில் நீ வியன் சுரம் இறப்பின்
பல் காழ் அல்குல் அவ்வரி வாடக்
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே.
7.
ஞெலி கழை முழங்கு அழல் வயமா வெரூஉம்
குன்று உடை அருஞ்சுரம் செல அயர்ந்தனையே
நன்று இல் கொண்க நின் பொருளே
பாவை யன்ன நின் துணை பிரிந்து வருமே.
8.
பல் இருங்கூந்தல் மெல்லியலோள் வயின்
பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர்க்
கால் எறுழ் ஒள் வீ தாஅய
முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே.
9.
வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே நன்று
நின் நயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறு வரை நாட நீ இறந்து செய் பொருளே.
10.
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்
இலங்கு வளை மெல் தோள் இழை நிலை நெகிழப்
பிரிதல் வல்லுவை ஆயின்
அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினே.
1.
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்
ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம்
காடு இறந்தனரே காதலர்
நீடுவர் கொல் என நினையும் என் நெஞ்சே.
2.
அறம் சாலியரோ அறம் சாலியரோ
வறன் உண்டாயினும் அறம் சாலியரோ
வாள் வனப்பு உற்ற அருவிக்
கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே.
3.
தெறுவது அம்ம நும் மகள் விருப்பே
உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய்ப்
பாழ் படு நெஞ்சம் படர் அடக் கலங்க
நாடு இடை விலங்கிய வைப்பின்
காடு இறந்தனள் நம் காதலோளே.
4.
அவிர் தொடி கொட்பக் கழுது புகவு அயரக்
கருங்கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவச்
சிறு கண் யானை ஆள் வீழ்துத் திரிதரும்
நீளிடை அருஞ்சுரம் என்ப நம்
தோளிடை முனிநர் சென்ற ஆறே.
5.
பாயல் கொண்ட பனி மலர் நெடுங்கண்
பூசல் கேளார் சேயர் என்ப
இழை நெகிழ் செல்லல் உறீஇக்
கழை முதிர் சோலைக் காடு இறந்தோரே.
6.
பொன் செய் பாண்டில் பொலங்கலம்
நந்தத்
தேர் அகல் அல்குல் அவ்வரி வாட
இறந்தோர் மன்ற தாமே பிறங்கு மலைப்
புல் அரை ஓமை நீடிய
புலி வழங்கு அதர கானத்தானே.
7.
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைது அற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே.
8.
ஆய் நலம் பசப்ப அரும் படர் நலிய
வேய் மருள் பணைத்தோள் வில் இழை நெகிழ
நசை நனி கொன்றோர் மன்ற இசை நிமிர்ந்து
ஓடு எரி நடந்த வைப்பின்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
9.
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்
மண் புரை பெருகிய மரம் முளி கானம்
இறந்தனரோ நம் காதலர்
மறந்தனரோ தில் மறவா நம்மே.
20.
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ
முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து
உருமுப்படு கனலின் இரு நிலத்து உறைக்கும்
கவலை அருஞ்சுரம் போயினர்
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே.
1.
உலறு தலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறிப்
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து
மொழி பெயர் பன் மலை இறப்பினும்
ஒழிதல் செல்லாது ஒண் தொடி குணனே.
2.
நெடுங் கழை முளிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல் பகத் தெறுதலின்
வெய்ய வாயின முன்னே இனியே
ஒண்ணுதல் அரிவையை உள்ளு தொறும்
தண்ணிய வாயின சுரத்திடை ஆறே.
3.
வள் எயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்
கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும்
வெஞ்சுரக் கவலை நீந்தி
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே.
4.
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைச்
சிறிது கண்படுப்பினும் காண்குவென் மன்ற
நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர்
வேங்கை வென்ற சுணங்கின்
தேம் பாய் கூந்தல் மாஅயோளே.
5.
வேனில் அரையத்து இலை யொலி வெரீஇப்
போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும்
வெம்பலை அருஞ்சுரம் நலியாது
எம் வெம் காதலி பண்பு துணைப் பெற்றே.
6.
அழல் அவிர் நனந்தலை நிழலிடம் பெறாது
மட மான் அம் பிணை மறியொடு திரங்க
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின்
இன்னா மன்ற சுரமே
இனிய மறையான் ஒழிந்தோள் பண்பே.
7.
பொறி வரித் தடக்கை வேதல் அஞ்சிச்
சிறு கண் யானை நிலந் தொடல் செல்லா
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே
அன்ன ஆர் இடை யானும்
தண்மை செய்த இத் தகையோள் பண்பே.
8.
நுண் மழை தளித்தென நறு மலர் தாஅய்த்
தண்ணியவாயினும் வெய்ய மன்ற
மடவரல் இன் துணை ஒழியக்
கட முதிர் சோலைய காடு இறந்தேற்கே.
9.
ஆள் வழக்கு அற்ற பாழ் படு நனந்தலை
வெம்முனை அருஞ்சுரம் நீந்தி நம்மொடு
மறு தருவது கொல் தானே செறி தொடி
கழித்து உகு நிலையவாக
ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே.
30.
வெந்துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி
வந்தனம் ஆயினும் ஒழிக இனிச் செலவே
அழுத கண்ணள் ஆய் நலம் சிதையக்
கதிர் தெறு வெஞ்சுரம் நினைக்கும்
அவிர் கோல் ஆய் தொடி உள்ளத்துப் படரே.
1.
அம்ம வாழி தோழி அவிழ் இணர்க்
கருங்கால் மராஅத்து வைகு சினை வான் பூ
அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள
இனிய கமழும் வெற்பின்
இன்னா என்ப அவர் சென்ற ஆறே.
2.
அம்ம வாழி தோழி என்னதூஉம்
அறன் இல மன்ற தாமே விறல் மிசைக்
குன்று கெழு கானத்த பண்பில் மாக்கணம்
கொடிதே காதலிப் பிரிதல்
செல்லல் ஐய என்னாதவ்வே.
3.
அம்ம வாழி தோழி யாவதும்
வல்லா கொல்லோ தாமே அவண
கல் உடை நன் நாட்டுப் புள்ளினப் பெருந்தோடு
யாஅம் துணை புணர்ந்து உறைதும்
யாங்குப் பிரிந்து உறைதி என்னாது அவ்வே.
4.
அம்ம வாழி தோழி சிறி இலை
நெல்லி நீடிய கல் காய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் பின் செலச் சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே.
5.
அம்ம வாழி தோழி நம் வயின்
நெய்தோர் அன்ன செவிய எருவை
கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும்
காடு நனி கடிய என்ப
நீடி இவண் வருநர் சென்ற ஆறே.
6.
அம்ம வாழி தோழி நம் வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றது இல் பொருள் பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே.
7.
அம்ம வாழி தோழி நம் வயின்
மெய்யுற விரும்பிய கை கவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனி இருங்குன்றம் சென்றோர்க்குப் பொருளே.
8.
அம்ம வாழி தோழி சாரல்
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்
மலையுறு தீயில் சுர முதல் தோன்றும்
பிரிவருங் காலையும் பிரிதல்
அரிது வல்லுநர் நம் காதலோரே.
9.
அம்ம வாழி தோழி சிறியிலைக்
குறுஞ்சினை வேம்பின் நறும் பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்று கொல் காதலவர் சென்ற நாடே.
40.
அம்ம வாழி தோழி காதலர்
உள்ளார் கொல் நாம் மருள் உற்றனம் கொல்
விட்டுச் சென்றனர் நம்மே
தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே.
1.
அவரோ வாரார் தான் வந்தன்றே
குயில் பெடை இன் குரல் அகவ
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே.
2.
அவரோ வாரார் தான் வந்தன்றே
சுரும்பு களித்து ஆலும் இருஞ்சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே.
3.
அவரோ வாரார் தான் வந்தன்றே
திணி நிலைக் கோங்கம் பயந்த
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே.
4.
அவரோ வாரார் தான் வந்தன்றே
நறும் பூங்குரவம் பயந்த
செய்யாப் பாவை கொய்யும் பொழுதே.
5.
அவரோ வாரார் தான் வந்தன்றே
புதுப் பூ அதிரல் தாஅய்க்
கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே.
6.
அவரோ வாரார் தான் வந்தன்றே
அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச்
செங்கண் இருங்குயில் அறையும் பொழுதே.
7.
அவரோ வாரார் தான் வந்தன்றே
எழில் தகை இள முலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறி திமிர் பொழுதே.
8.
அவரோ வாரார் தான் வந்தன்றே
வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம்
மணங்கமழ் தண் பொழில் மலரும் பொழுதே.
9.
அவரோ வாரார் தான் வந்தன்றே
பொரி கால் மாஞ்சினை புதைய
எரி கால் இளந்தளிர் ஈனும் பொழுதே.
50.
அவரோ வாரார் தான் வந்தன்றே
வேம்பின் ஒண் பூ உறப்பத்
தேம் படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே.
1.
அத்த பலவின் வெயில் தின் சிறு காய்
அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும்
காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனிப்
பல் இதழ் உண்கண் மடந்தை நின்
நல் எழில் அல்குல் வாடிய நிலையே.
2.
விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப்பிணர்ப்
பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும்
வெஞ்சுரம் அரிய என்னார்
வந்தனர் தோழி நம் காதலோரே.
3.
எரிக்கொடி கவைஇய செவ்வரை போலச்
சுடர்ப்பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம்
நீ இனிது முயங்க வந்தனர்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.
4.
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை
மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன் வந்தனரே
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே.
5.
திருந்து இழை அரிவை நின் நலம் உள்ளி
அருஞ் செயல் பொருட் பிணி பெருந்திரு உறுக எனச்
சொல்லாது பெயர் தந்தேனே பல் பொறிச்
சிறு கண் யானை திரிதரும்
நெறி விலங்கு அதர கானத்தானே.
6.
உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்
யானை பிணித்த பொன் புனை கயிற்றின்
ஒள் எரி மேய்ந்த சுரத்திடை
உள்ளம் வாங்கத் தந்த நின் குணனே.
7.
குரவம் மலர மரவம் பூப்பச்
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ
அழுங்குக செய்பொருள் செலவு என விரும்பி நின்
நலம் கலிழ் மாமை கவின
வந்தனர் தோழி நம் காதலோரே.
8.
கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும்
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே.
9.
அரும் பொருள் வேட்கைய மாகி நின் துறந்து
பெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத்
தவ நனி நெடிய ஆயின இனியே
அணி இழை உள்ளியாம் வருதலின்
அணிய ஆயின சுரத்திடை ஆறே.
60.
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீளிடை
அரிய வாயினும் எளிய அன்றே
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பிக்
கடுமான் திண் தேர் கடைஇ
நெடுமான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே.
1.
உயர் கரைக் கான் யாற்று அவிர் மணல் அகன் துறை
வேனில் பாதிரி விரி மலர் குவைஇத்
தொடலை தை இய மடவரல் மகளே
கண்ணினும் கதவ நின் முலையே
முலையினும் கதவ நின் தட மென் தோளே.
2.
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங்கவலைச்
சிறு கண் யானை உறு பகை நினையாது
யாங்கு வந்தனையோ பூந்தார் மார்ப
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
இருள் பொர நின்ற இரவினானே.
3.
சிலை வில் பகழிச் செந் துவர் ஆடை
கொலை வல் எயினர் தங்கை நின் முலைய
சுணங்கு என நினைதி நீயே
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே.
4.
முளமா வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச்
சொல்லினென் இரக்கும் அளவை
வெள் வேல் விடலை விரையாதீமே.
5.
கண மா தொலைச்சித் தன் ஐயர் தந்த
நிண ஊன் வல்சிப் படு புள் ஒப்பும்
நல மாண் எயிற்றி போலப் பல மிகு
நல் நலம் நயவர உடையை
என் நோற்றனையோ மாவின் தளிரே.
6.
அன்னாய் வாழி வேண்டன்னை தோழி
பசந்தனள் பெரிது எனச் சிவந்த கண்ணை
கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம்
அறிய ஆகுமோ மற்றே
முறி இணர்க் கோங்கம் பயந்த மாறே.
7.
பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ
விரி இணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி
விரிவு மலர் அணிந்த வேனில் கான் ஆற்றுத்
தேரொடு குறுக வந்தோன்
பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிரே.
8.
எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் பலர்
பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ பெரும நின்
எம் மெல் ஓதி அழிவிலள் எனினே.
9.
வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில்
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறி நீ செய்தனை என்ப அலரே
குரவ நீள் சினை உறையும்
பருவ மாக்குயில் கௌவையின் பெரிதே.
70.
வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை
இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப
நீ நயந்து உறைப்பட்டோள்
யாவளோ எம் மறையா தீமே.
1.
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடுங் குன்றம் படு மழை தலைஇச்
சுர நனி இனியவாகுக தில்ல
அற நெறி இதுவெனத் தெளிந்த என்
பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே.
2.
என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு
அழுங்கல் மூதூர் அலர் எழச்
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே.
3.
நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக
புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை
மான் பிணை அணை தர ஆண் குரல் விளிக்கும்
வெஞ்சுரம் என் மகள் உய்த்த
அம்பு அமை வல்வில் விடலை தாயே.
4.
பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ
மீளி முன்பின் காளை காப்ப
முடி அகம் புகாக் கூந்தலள்
கடுவனும் அறியாக் காடு இறந்தோளே.
5.
இது என் பாவை பாவை இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி என்றிவை
காண்தொறும் காண்தொறும் கலங்க
நீங்கினளோ என் பூங்கணோளே.
6.
நாள் தொறும் கலிழும் என்னினும் இடை நின்று
காடு படு தீயின் கனலியர் மாதோ
நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்கப்
பூப் புரை உண்கண் மடவரல்
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே.
7.
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்ற என் மகளே
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே.
8.
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன் தேமொழித்
துணையிலள் கலிழும் நெஞ்சின்
இணையேர் உண்கண் இவட்கு நோவதுமே.
9.
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின்
இனிது ஆம் கொல்லோ தனக்கே பனி வரை
இனக் களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள் வேல் அவர் புணர்ந்து செலவே?
80.
அத்தம் நீள் இடை அவனொடு போகிய
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே.
1.
பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
செங்கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர்
யார் கொல் அளியர் தாமே வார் சிறைக்
குறுங்கால் மகன்றில் அன்ன
உடன் புணர் கொள்கைக் காதலோரே.
2.
புள் ஒலிக்கு அமர்த்த கண்ணன் வெள் வேல்
திருந்து கழல் காளையொடு அருஞ்சுரம் கழிவோள்
எல் இடை அசைந்த கல்லென் சீறூர்ப்
புனை இழை மகளிர்ப் பயந்த
மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.
3.
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற
நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி
வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ்கூர்ந்தன்றே
பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே.
4.
சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர்
நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர்
யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின
ஆரிடை இறந்தனள் என்மின்
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே.
5.
கடுங்கண் காளையொடு நெடுந்தேர் ஏறிக்
கோள் வல் வேங்கை மலை பிறக்கொழிய
வேறு பல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக்
கூறுமின் வாழியோ ஆறு செல் மாக்கள்
நல் தோள் நயந்து பாராட்டி
எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே.
6.
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம்
நயந்த காதலற் புணர்ந்து சென்றனளே
நெடுஞ் சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறவி நின் கடுஞ்சூல் மகளே.
7.
அறம் புரி அருமறை நவின்ற நாவில்
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று
ஒண் தொடி வினவும் பேதையம் பெண்டே
கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை
இன்துணை இனிது பாராட்டக்
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே.
8.
நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணியக்
கருங்கால் யாத்து வரி நிழல் இரீஇச்
சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடிப்
பொன் ஏர் மேனி மடந்தையொடு
வென் வேல் விடலை முன்னிய சுரனே.
9.
செய்வினை பொலிந்த செறி கழல் நோன்தாள்
மை அணல் காளையொடு பைய இயலிப்
பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை
சென்றனள் என்றிர் ஐய
ஒன்றினவோ அவள் அம் சிலம்பு அடியே.
90.
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது
பல் ஊழ் மருகி வினவுவோயே
திண் தோள் வல் வில் காளையொடு
கண்டனெம் மன்ற சுரத்து இடை யாமே.
1.
மறு இல் தூவிச் சிறு கருங்காக்கை
அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெம் சின விறல் வேல் காளையொடு
அம் சில் ஓதியை வரக் கரைந்தீமே.
2.
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கிப்
பரியல் வாழி தோழி பரியின்
எல்லை இல் இடும்பை தரூஉம்
நல் வரை நாடனொடு வந்த மாறே.
3.
துறந்ததன் கொண்டு துயர் அடச் சாஅய்
அறம் புலந்து பழிக்கும் அம் கண் ஆட்டி
எவ்வ நெஞ்சிற்கு ஏம மாக
வந்தனளோ நின் மகளே
வெந்திறல் வெள்வேல் விடலை முந்துறவே.
4.
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற
வெஞ்சுரம் இறந்த அம் சில் ஓதிப்
பெரு மட மான் பிணை அலைத்த
சிறு நுதல் குறுமகள் காட்டிய வம்மே.
5.
முளி வயிர்ப் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர்விடு நெடுங்கொடி விடர் குகை முழங்கும்
இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம் மென் மெல
ஏகுமதி வாழியோ குறுமகள் போது கலந்து
கறங்கு இசை அருவி வீழும்
பிறங்கு இருஞ் சோலை நம் மலை கெழு நாட்டே.
6.
புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து நின்
கதுப்பு அயல் அணியும் அளவை பைபயச்
சுரத்திடை அயர்ச்சியை ஆறுக மடந்தை
கல் கெழு சிறப்பின் நம்மூர்
எல் விருந்தாகிப் புகுகம் நாமே.
7.
கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரன்அணி வாரா நின்றனள் என்பது
முன்னுற விரைந்த நீர் உரைமின்
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே.
8.
புள்ளும் அறியாப் பல் பழம் பழுனி
மடமான் அறியாத் தட நீர் நிலைஇச்
சுர நனி இனிய வாகுக என்று
நினைத்தொறும் கலிழும் என்னினும்
மிகப் பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே.
9.
நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம் மனை வதுவை நன் மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
மை அற விளங்கிய கழல் அடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?
400.
மள்ளர் அன்ன மரவம் தழீஇ
மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும்
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில்
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல்
வெஞ்சின விறல் வேல் காளையோடு
இன்று புகு தருமென வந்தன்று தூதே.
****