*
1. பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும்
இருந்தது.
2. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில்,
சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே
குடியிருந்தார்கள்.
3. அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து,
அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று
ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்;
கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக
நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
4. பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும்
சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை
அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர்
உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று
சொல்லிக்கொண்டார்கள்.
5. மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக்
கர்த்தர் இறங்கினார்.
6. அப்பொழுது கர்த்தர் : இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய்
இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும்
இருக்கிறது; அவர்கள் இதைச்
செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும்
தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று
இருக்கிறார்கள்.
7. நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர்
அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத்
தாறுமாறாக்குவோம் என்றார்.
8. அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து
பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்;
அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
9. பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில்
தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது;
கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும்
சிதறிப்போகப்பண்ணினார்.
10. சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு
வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப்
பெற்றான்.
11. சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
12. அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப்
பெற்றான்.
13. சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று
வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
14. சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
15. ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
16. ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
17. பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
18. பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
19. ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது
வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
20. ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப்
பெற்றான்.
21. செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
22. செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.
23. நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
24. நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப்
பெற்றான்.
25. தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது
வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
26. தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான்
என்பவர்களைப் பெற்றான்.
27. தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர்,
ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப்
பெற்றான்.
28. ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப்
பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே
மரித்தான்.
29. ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப்
பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச்
சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்;
இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும்
இஸ்காளுக்கும் தகப்பன்.
30. சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள்.
31. தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய
குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன்
ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும்
அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற
கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப்
புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே
இருந்துவிட்டார்கள்.
32. தேராகுடைய ஆயுசுநாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு
ஆரானிலே மரித்தான்.
*
1. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும்,
உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக்
காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை
ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ
ஆசீர்வாதமாய் இருப்பாய்.
3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச்
சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்
உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
4. கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன்
புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம்
ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து
வயதுள்ளவனாயிருந்தான்.
5. ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய
குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள்
சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த
ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான்
தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்திலே சேர்ந்தார்கள்.
6. ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும்
இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்;
அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.
7. கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத்
தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது
அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக்
கட்டினான்.
8. பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து,
பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல்
தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்
போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய
நாமத்தைத் தொழுதுகொண்டான்.
9. அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே
பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.
10. அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம்
கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே
தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.
11. அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி
சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று
அறிவேன்.
12. எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி
என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை
உயிரோடே வைப்பார்கள்.
13. ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும்,
உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி
என்று சொல் என்றான்.
14. ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த
அழகுள்ளவளென்று கண்டார்கள்.
15. பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு
முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த
ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக்
கொண்டுபோகப்பட்டாள்.
16. அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்;
அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும்,
வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.
17. ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர்
பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால்
வாதித்தார்.
18. அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு
ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ
எனக்கு அறிவியாமற் போனதென்ன?
19. இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது
என்ன? இவளை நான் எனக்கு
மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை
அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.
20. பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை
கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும்
அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.
*
1. ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும்,
அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.
2. ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும்
பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான்.
3. அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்
மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு
கூடாரம்போட்டதும்,
4. தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான
ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத்
தொழுதுகொண்டான்.
5. ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும்
இருந்தன.
6. அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத்
தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி
மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண
ஏதுவில்லாமற்போயிற்று.
7. ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும்
வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே
கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.
8. ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும்
உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.
9. இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன் இருக்கிறது
அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம்
போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால்,
நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.
10. அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்
பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம்
பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும்
கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம்
வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து
தேசத்தைப்போலவும் இருந்தது.
11. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி
முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே
பிரயாணப்பட்டுப் போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர்
விட்டுப் பிரிந்தார்கள்.
12. ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த
யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில்
வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.
13. சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு
முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.
14. லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி:
உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து
வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
15. நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன்
சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,
16. உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்;
ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும்
எண்ணப்படும்.
17. நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து
திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.
18. அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப்
பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின்
சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக்
கட்டினான்.
*
1. சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும்,
ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும் ஏலாமின்
ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின்
ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;
2. அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும்,
கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும்,
அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும்,
செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார்
என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.
3. இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம்
பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.
4. இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து,
பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம்பண்ணினார்கள்.
5. பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே
கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த
ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும்,
சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,
6. சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு
அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,
7. திரும்பிக் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து,
அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே
குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள்.
8. அப்பொழுது சோதோமின் ராஜாவும்,
கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும்,
செபோயீமின் ராஜாவும், சோவார் என்னும் பேலாவின்
ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே,
9. ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும்,
ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும், சிநெயாரின்
ராஜாவாகிய அம்ராப்பேலோடும், ஏலாசாரின்
ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த
ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும்
யுத்தம்பண்ணினார்கள்.
10. அந்தச் சித்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும்
கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள்
முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள் மலைகளுக்கு
ஓடிப்போனார்கள்.
11. அப்பொழுது அவர்கள் சோதோமிலும்
கொமோராவிலுமுள்ள பொருள்கள்
எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
12. ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே
குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும்
கொண்டுபோய்விட்டார்கள்.
13. தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில்
வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை
செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும்
சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே
அப்பொழுது குடியிருந்தான்.
14. தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை
ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த
கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும்
ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத்
தொடர்ந்து,
15. இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து,
பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து,
தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி,
16. சகல பொருள்களையும்
திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய
லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும்,
ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.
17. அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த
ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா
புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே
பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.
18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த
சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும்
திராட்சரசமும் கொண்டுவந்து,
19. அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய
உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு
உண்டாவதாக.
20. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த
உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று
சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும்
தசமபாகம் கொடுத்தான்.
21. சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத்
தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும்
என்றான்.
22. அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை
ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு
நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும்,
உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும்
எடுத்துக்கொள்ளேன் என்று,
23. வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான
தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.
24. வாலிபர் சாப்பிட்டது போக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல்,
மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள்
தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
*
1. இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை
ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ
பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா
பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
2. அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு
என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு
ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்
கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
3. பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம்
அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச்
சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
4. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு
உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன்
கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்
என்று சொல்லி,
5. அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து
பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால்,
அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி:
உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு
நீதியாக எண்ணினார்.
7. பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச்
சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை
ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர்
நானே என்றார்.
8. அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச்
சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன்
என்றான்.
9. அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது
வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு
காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில்
கொண்டுவா என்றார்.
10. அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில்
கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து,
துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்;
பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.
11. பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம்
துரத்தினான்.
12. சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை
வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.
13. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார்
தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து,
அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு
வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய்
அறியக்கடவாய்.
14. இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்;
பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
15. நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல
முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
16. நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப
வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம்
இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
17. சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற
சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற
அக்கினிஜுவாலையும் தோன்றின.
18. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி,
எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய
நதிமட்டுமுள்ளதும்
19. கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
20. ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
21. எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும்
என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக்
கொடுத்தேன் என்றார்.
*