1.
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் ஐ
தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின
பொன் வீ மணி அரும்பினவே
என்ன மரம் கொல் அவர் சாரல் அவ்வே.
2.
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே.
3.
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலை கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.
4.
அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன் கொல்
வரையர மகளிரின் நிரையுடன் குழீஇப்
பெயர் வுழிப் பெயர் வுழித் தவிராது நோக்கி
நல்லள் நல்லள் என்ப
தீயேன் தில்ல மலை கிழவோர்க்கே.
5.
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி
நனி நாண் உடையள் நின்னும் அஞ்சும்
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல்
துஞ்சிய வெய்யள் நோகோ யானே.
6.
அன்னாய் வாழி வேண்டு அன்னை உவக்காண்
மாரிக் குன்றத்துக் காப்பான் அன்னன்
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்
பாசி சூழ்ந்த பெருங்கழல்
தண் பனி வைகிய வரிக் கச்சினனே.
7.
அன்னாய் வாழி வேண்டு அன்னை நன்றும்
உணங்கல கொல்லோ நின் தினையே உவக்காண்
நிணம் பொதி வழுக்கின் தோன்றும்
மழைதலை வைத்து அவர் மணி நெடுங்குன்றே.
8.
அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர்
கிழங்கு அகழ் நெடுங்குழி மல்க வேங்கைப்
பொன் மலி புது வீத் தாஅம் அவர் நாட்டு
மணி நிற மால் வரை மறைதொறு இவள்
அணி மலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே.
9.
அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடித்
தோன்றல் ஆனாது அவர் மணி நெடுங்குன்றே.
10.
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
புலவுச் சேர் துறுகல் ஏறி அவர் நாட்டுப்
பூக் கெழு குன்றம் நோக்கி நின்று
மணி புரை வயங்கிழை நிலைபெறத்
தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே.
1.
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன
வயலையஞ் சிலம்பின் தலையது
செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய்.
2.
சாத்த மரத்த பூழில் எழு புகை
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய்.
3.
நறு வடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த
ஈர்ந்தண் பெரு வடுப் பாலையில் குறவர்
உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல்
மீ மிசை நன்னாட்டவர் வரின்
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய்.
4.
சாரல் பலவின் கொழுந்துணர் நறும் பழம்
இருங்கல் விடர் அளை வீழ்ந்தென வெற்பில்
பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன்
பேர் அமர் மழைக் கண் கலிழத் தன்
சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய்.
5.
கட்டளை அன்ன மணி நிறத் தும்பி
இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர்
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்
புதல் மலர் மாலையும் பிரிவோர்
இதனினும் கொடிய செய்குவர் அன்னாய்.
6.
குறுங்கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை
நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற
நடுங்கு நடைக் குழவி கொளீஇய பலவின்
பழந்தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்குக்
கொய்திடு தளிரின் வாடி நின்
மெய் பிறிதாதல் எவன் கொல் அன்னாய்.
7.
பெரு வரை வேங்கைப் பொன் மருள் நறு வீ
மான் இனப் பெருங்கிளை மேயல் ஆரும்
கானக நாடன் வரவும் இவள்
மேனி பசப்பது எவன் கொல் அன்னாய்.
8.
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்
மயிர் வார் முன் கை வளையும் செறூஉம்
களிறு கோள் பிழைத்த கதஞ்சிறந்து எழு புலி
எழுதரு மழையின் குழுமும்
பெருங்கல் நாடன் வருங்கொல் அன்னாய்.
9.
கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள் வீ
இருங்கல் வியல் அறை வரிப்பத் தாஅம்
நன் மலை நாடன் பிரிந்தென
ஒண்ணுதல் பசப்பது எவன் கொல் அன்னாய்.
20.
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெரு வரை அன்ன திரு விறல் வியன் மார்பு
முயங்காது கழிந்த நாள் இவள்
மயங்கிதழ் மழைக் கண் கலிழும் அன்னாய்.
1.
அம்ம வாழி தோழி காதலர்
பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய
நன் மா மேனி பசப்பச்
செல்வல் என்ப தம் மலை கெழு நாடே.
2.
அம்ம வாழி தோழி நம் ஊர்
நனிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன்
இன் இனி வாரா மாறு கொல்
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே.
3.
அம்ம வாழி தோழி நம் மலை
வரை ஆம் இழியக் கோடல் நீடக்
காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும்
தண் பனி வடந்தை அச்சிரம்
முந்து வந்தனர் நம் காதலோரே.
4.
அம்ம வாழி தோழி நம் மலை
மணி நிறங் கொண்ட மா மலை வெற்பில்
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய மன்னால் அவர்க்கு இனி
அரிய ஆகுதல் மருண்டனென் யானே.
5.
அம்ம வாழி தோழி பைஞ்சுனைப்
பாசடை நிவந்த பனி மலர்க் குவளை
உள் அகம் கமழும் கூந்தல் மெல்லியல்
ஏர் திகழ் ஒண்ணுதல் பசத்தல்
ஓரார் கொல் நம் காதலோரே.
6.
அம்ம வாழி தோழி நம் மலை
நறும் தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புற மாறி நின்
வன்புடை விறல் கவின் கொண்ட
அன்பிலாளன் வந்தனன் இனியே.
7.
அம்ம வாழி தோழி நாளும்
நல் நுதல் பசப்பவும் நறுந் தோள் ஞெகிழவும்
ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி
நப்பிரிந்து உறைந்தோர் மன்ற நீ
விட்டனையோ அவர் உற்ற சூளே.
8.
அம்ம வாழி தோழி நம்மூர்
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன்
இரந்து குறையுறாஅன் பெயரின்
என் ஆவது கொல் நம் இன் உயிர் நிலையே.
9.
அம்ம வாழி தோழி நாம் அழப்
பன்னாள் பிரிந்த அறன் இலாளன்
வந்தனனோ மற்று இரவில்
பொன் போல் விறல் கவின் கொள்ளும் நின் நுதலே.
30.
அம்ம வாழி தோழி நம்மொடு
சிறு தினைக் காவலன் ஆகிப் பெரிது நின்
மெல் தோள் நெகிழவும் திரு நுதல் பசப்பவும்
பொன் போல் விறல் கவின் தொலைத்த
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே.
1.
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப
இரும் பல் கூந்தல் திருந்திழை அரிவை
திதலை மாமை தேயப்
பசலை பாயப் பிரிவு தெய்யோ.
2.
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க
ஏதிலாட்டியை நீ பிரிந்ததற்கே
அழல் அவிர் மணிப் பூண் நனையப்
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ.
3.
வருவை அல்லை வாடை நனி கொடிதே
அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி
ஒல்லென இழிதரும் அருவி நின்
கல் உடை நாட்டுச் செல்லல் தெய்யோ.
4.
மின் அவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்
நன் நுதல் பசத்தல் யாவது துன்னிக்
கனவில் காணும் இவளே
நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ.
5.
கையுற வீழ்ந்த மை இல் வானமொடு
அரிது காதலர்ப் பொழுதே அதனால்
தெரி இழை தெளிர்ப்ப முயங்கிப்
பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ.
6.
அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று
நன் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும்
இன்னா வாடையும் மலையும்
நும் ஊர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ.
7.
காமம் கடவ உள்ளம் இனைப்ப
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின்
ஓங்கித் தோன்றும் உயர் வரைக்கு
யாங்கு எனப்படுவது நும்மூர் தெய்யோ.
8.
வார்க்கோட்டு வயத் தகர் வாராது மாறினும்
குரூஉ மயிர்ப் புருவை நசையின் அல்கும்
மாஅல் அருவித் தண் பெருஞ் சிலம்ப
நீ இவன் வரூஉம் காலை
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ.
9.
சுரும்பு உணக் களித்த புகர் முக வேழம்
இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம் நின்
குன்று கெழு நன்னாட்டுச் சென்ற பின்றை
நேர் இறைப் பணைத்தோள் ஞெகிழ
வாராயாயின் வாழேம் தெய்யோ.
40.
அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ
பொறி வரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்
சாந்தம் நாறும் நறியோள்
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ.
1.
நம் உறு துயரம் நோக்கி அன்னை
வேலன் தந்தாள் ஆயின் அவ் வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறி எயிற்றோயே.
2.
அறியாமையின் வெறியென மயங்கி
அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனால்
எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ்
ஆய் மலர் உண்கண் பசப்பச்
சேய் மலை நாடன் செய்த நோயே.
3.
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறி எனக் கூறும்
அது மனம் கொள்குவை அனையிவள்
புது மலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.
4.
அம்ம வாழி தோழி பன் மலர்
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்
என் பயஞ் செய்யுமோ வேலற்கு அவ் வெறியே.
5.
பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை கொல் இவள் அணங்கியோற்கே.
6.
வெறி செறித்தனனே வேலன் கறிய
கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப் படூஉ
புன்பலம் வித்திய புனவர் புணர்த்த
மெய்ம்மையன்ன பெண்பாற் புணர்ந்து
மன்றில் பையுள் தீரும்
குன்ற நாடன் உறீஇய நோயே.
7.
அன்னை தந்தது ஆகுவது அறிவென்
பொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
அரு வரை நாடன் பெயர் கொலோ அதுவே.
8.
பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி
மலைவான் கொண்ட சினைஇய வேலன்
கழங்கினால் அறிகுவது என்றால்
நன்றால் அம்ம நின்ற இவள் நலனே.
9.
பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு
முருகு என மொழியும் வேலன் மற்றவன்
வாழிய இலங்கும் அருவிச்
சூர் மலை நாடனை அறியாதோனே.
50.
பொய் படு அறியாக் கழங்கே மெய்யே
மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம்
மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன்
ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள்
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே.
1.
குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
நுண் பல் அழி துளி பொழியும் நாட
நெடு வரைப் படப்பை நும் ஊர்க்
கடு வரல் அருவி காணினும் அழுமே.
2.
குன்றக் குறவன் புல் வேய்க் குரம்பை
மன்றாடு இள மழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி தோழி விரை பெயல்
அரும் பனி அளைஇய கூதிர்ப்
பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே.
3.
குன்றக் குறவன் சாந்த நறும் புகை
தேங்கமழ் சிலம்பின் வரையகம் கமழும்
கானக நாடன் வரையின்
மன்றலும் உடையள் கொல் தோழி யாயே?
4.
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள்
கொண்டனர் செல்வர் தம் குன்று கெழு நாட்டே.
5.
குன்றக் குறவன் காதல் மட மகள்
வரையர மகளிர்ப் புரையும் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே.
6.
குன்றக் குறவன் காதல் மடமகள்
வண்டு படு கூந்தல் தண் தழைக் கொடிச்சி
வளையள் முளை வாள் எயிற்றள்
இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே.
7.
குன்றக் குறவன் கடவுள் பேணி
இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள்
ஆய் அரி நெடுங்கண் கலிழச்
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே.
8.
குன்றக் குறுவன் காதல் மடமகள்
அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியைப்
பெரு வரை நாடன் வரையும் ஆயின்
கொடுத்தனெம் ஆயினோம் நன்றே
இன்னும் ஆனாது நன்னுதல் துயரே.
9.
குன்றக் குறவன் காதல் மடமகள்
மன்ற வேங்கை மலர் சில கொண்டு
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தித்
தேம் பலிச் செய்த ஈர் நறும் கையள்
மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே.
60.
குன்றக் குறவன் காதல் மடமகள்
மெந்தோள் கொடிச்சியைப் பெறற்கு அரிது தில்ல
பைம்புறப் படு கிளி ஓப்பலர்
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே.
1.
மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி
வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்
எந்தை அறிதல் அஞ்சிக் கொல்?
அதுவே மன்ற வாராமையே.
2.
சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்கு மலை நாடன் வரூஉம்
மருந்தும் அறியும் கொல் தோழி அவன் விருப்பே.
3.
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும்
குன்று கெழு நாடன் தானும்
வந்தனன் வந்தன்று தோழி என் நலனே.
4.
இளம் பிறையன்ன கோட்ட கேழல்
களங்கனியன்ன பெண்பால் புணரும்
அயம் திகழ் சிலம்ப கண்டிகும்
பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே.
5.
புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும்
குன்று கெழு நாடன் மறந்தனன்
பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே.
6.
சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு
குறுங்கை இரும் புலி பொரூஉம் நாட
நனி நாண் உடைய மன்ற
பனிப் பயந்தன நீ நயந்தோள் கண்ணே.
7.
சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி
ஐவனம் கவரும் குன்ற நாடன்
வண்டு படு கூந்தலைப் பேணிப்
பண்பு இல சொல்லும் தேறுதல் செத்தே.
8.
தாஅ இழந்த தழு வரிக் குருளையொடு
வள மலைச் சிறு தினை உணீஇய கானவர்
வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும்
நன் மலை நாடன் பிரிதல்
என் பயக்கும்மோ நம் விட்டுத் துறந்தே.
9.
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை
விளைந்த செறுவில் தோன்றும் நாடன்
வாராது அவண் உறை நீடின் நேர் வளை
இணை ஈர் ஓதி நீ அழத்
துணை நனி இழக்குவென் மடமை யானே.
70.
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில்
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்
புல்லென் குன்றத்துப் புலம்பு கொள் நெடு வரை
காணினும் கலிழு நோய் செத்துத்
தாம் வந்தனர் நம் காதலோரே.
1.
அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்
பல் பசுப் பெண்டிரும் பெறுகுவன்
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே.
2.
கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ்
அரு வரைத் தீந்தேன் எடுப்பி அயலது
உருகெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்
வரும் வரும் என்பள் தோழி யாயே.
3.
அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர்
புன்தலை மந்தி வன் பறழ் ஆரும்
நன் மலை நாட நீ செலின்
நின் நயத்து உறைவி என்னினும் கலிழ்மே.
4.
மந்திக் கணவன் கல்லாக் கடுவன்
ஒண் கேழ் வயப் புலி குழுமலின் விரைந்து உடன்
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி தோழி என்
மென் தோள் கவினும் பாயலும் கொண்டே.
5.
குரங்கின் தலைவன் குரூஉ மயிர்க் கடுவன்
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட
யாம் நின் நயந்தனம் எனினும் எம்
ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே.
6.
மந்திக் காதலன் முறி மேய் கடுவன்
தண் கமழ் நறைக் கொடி கொண்டு வியல் அறைப்
பொங்கல் இள மழை புடைக்கும் நாட
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ
கன் முகை வேங்கை மலரும்
நன் மலை நாடன் பெண்டு எனப்படுத்தே.
7.
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாட நின் மொழிவல் என்றும்
பயப்ப நீத்தல் என் இவள்
கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே.
8.
சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய் தந்து
கண்டோர் தண்டா நலம் கொண்டனனே.
9.
கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக்
குளவி மேய்ந்த மந்தி துணையோடு
வரை மிசை உகளும் நாட நீ வரின்
கல் அகத்தது எம் ஊரே
அம்பல் சேரி அலர் ஆங்கட்டே.
80.
கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு
இரு வெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறு கோல்
மதி புடைப்பது போல தோன்றும் நாட
வரைந்தனை நீ எனக் கேட்டு யான்
உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே.
1.
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய பலவே ஒள் இழை
இரும்பல் கூந்தல் கொடிச்சி
பெருந்தோள் காவல் காட்டியவ்வே.
2.
சாரல் புறத்த பெருங்குரல் சிறு தினைப்
பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறு கிளி உன்னும் நாட
ஆர் இருள் பெருகின வாரல்
கோட்டு மா வழங்கும் காட்டக நெறியே.
3.
வன்கண் கானவன் மென் சொல் மடமகள்
புன்புல மயக்கத்து உழுத ஏனல்
பைம்புறச் சிறு கிளி கடியும் நாட
பெரிய கூறி நீப்பினும்
பொய் வலைப் படூஉம் பெண்டு தவப் பலவே.
4.
அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி
குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்
இருவை நீள் புனம் கண்டும்
பிரிதல் தேற்றாப் பேரன் பினவே.
5.
பின் இருங்கூந்தல் நல் நுதல் குறமகள்
மெல் தினை நுவணை உண்டு தட்டையின்
ஐவனச் சிறு கிளி கடியும் நாட
வீங்கு வளை நெகிழப் பிரிதல்
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே?
6.
சிறுதினை கொய்த இருவை வெண்கால்
காய்த்த அவரைப் படு கிளி கடியும்
யாணர் ஆகிய நன் மலை நாடன்
புகர் இன்று நயந்தனன் போலும்
கவரும் தோழி என் மாமைக் கவினே.
7.
நெடு வரை மிசையது குறுங்கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட
வல்லை மன்ற பொய்த்தல்
வல்லாய் மன்ற நீ அல்லது செயலே.
8.
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து
யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர்
மெல்லியல் கொடிச்சி காப்பப்
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே.
9.
கொடிச்சி இன் குரல் கிளி செத்து அடுக்கத்துப்
பைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக்
காவலும் கடியுநர் போல்வர்
மால் வரை நாட வரைந்தனை கொண்மோ.
90.
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூக் கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும் அவள் ஓப்பவும் படுமே.
1.
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்
துறு கல் அடுக்கத்து அதுவே பணைத்தோள்
ஆய் தழை நுடங்கும் அல்குல்
காதலி உறையும் நனி நல்லூரே.
2.
மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத்
தண் மழை தழீஇய மா மலை நாட
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீ நயந்து
நன் மனை அருங்கடி அயர
எம் நலம் சிறப்ப யாம் இனிப் பெற்றோளே.
3.
சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன
நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே
பாயல் இந்துணை ஆகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே.
4.
எரி மருள் வேங்கை இருந்த தோகை
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட
இனிது செய்தனையால் நுந்தை வாழியர்
நன் மனை வதுவை அயர இவள்
பின்னிருங் கூந்தல் மலர் அணிந்தோயே.
5.
வருவது கொல்லோ தானே வாராது
அவண் உறை மேவலின் அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை
இருவி இருந்த குருவி வருந்துறப்
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்று கெழு நாடனொடு சென்ற என்
நெஞ்சே?
6.
கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட
நடுநாள் கங்குலும் வருதி
கடுமா தாக்கின் அறியேன் யானே.
7.
விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட
பிரியினும் பிரிவது அன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே.
8.
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல் நல்லூர் அசை நடைக் கொடிச்சி
தான் எம் அருளாள் ஆயினும்
யாம் தன் உள்ளுபு மறந்தறி யேமே.
9.
குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அம் சில் ஓதி அசை நடைக் கொடிச்சி
கண் போல் மலர்தலும் அரிது இவள்
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.
300.
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம் சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன்
வந்தனன் எதிர்ந்தனர் கொடையே
அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே.
***